மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தை மத்திய அரசின் அனுமதியின்றி விடுதலை செய்தது அம்பலம்!


மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தை மத்திய அரசின் அனுமதியின்றி விடுதலை செய்தது அம்பலம்!
x
தினத்தந்தி 16 May 2019 7:45 AM GMT (Updated: 16 May 2019 7:45 AM GMT)

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தை மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலமாகி உள்ளது.

சென்னை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7 பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையொப்பத்தில் வந்து நிற்கிறது. இன்னும் 7 பேர் விடுதலை வழக்கில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில்  மும்பைக் குண்டு வெடிப்பு வழக்கில் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து வருடம் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த விடுதலை தொடர்பாக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டதா? எனப் பேரறிவாளன் ஆர்.டி.ஐ மூலம் கேள்வி கேட்டிருந்தார்.

தற்போது அதற்கு `இல்லை’ என எரவாடா சிறை மேல்முறையீட்டு தகவல் அலுவலர் ஒப்புக்கொண்டு ஆவணங்கள் அளித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 இது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், 

`சிபிஐ விசாரித்த வழக்கு என்ற ஒரு காரணத்தினால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய குற்ற விசாரணை சட்டம் பிரிவு 134 (1) இன் படி மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தனர்.

அந்தத் தீர்ப்பின் படி மாநில அரசின் ஆளுமைக்குக் கீழ் உள்ள வழக்குகளில் தண்டனை பெறுபவர்களுக்கு மாநில அரசால் ஒரு நாள் கழிவுகூட வழங்க முடியாது என்ற நிலையில் ஏறத்தாழ எட்டு மாதங்கள் முன்னதாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் வழக்குகளின் சட்டப் பிரிவுகளுக்கு கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு பரோல் வழங்கமுடியாத நிலையில் சஞ்சய் தத்துக்கு ஆறு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதை தண்டனைக் காலமாக கருதி அவரின் தண்டனை முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் வெளிநாட்டில் சுதந்திரமாக நடமாடும் வழக்கில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது சட்ட பாகுபாட்டையே காட்டுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story