கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்


கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்
x
தினத்தந்தி 16 May 2019 11:36 AM GMT (Updated: 16 May 2019 11:36 AM GMT)

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மதுரை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

மதுரை,

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் விஜயன் நேற்று மதுரை ஐகோர்ட்டில், நீதிபதி புகழேந்தி முன்பு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிப்பது தொடர்பான மனுக்களை விடுமுறை கால கோர்ட்டில் விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் மனுதாரர் அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் தரப்பு வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்க ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

கமல்ஹாசனுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு வழக்கு விசாரணையில் போது நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா?  சர்ச்சைக்குரிய கருத்துக்கள் விவாதங்களுக்கு உள்ளாகும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேர்தல் முடியும் வரை சர்ச்சை கருத்தை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறித்தினர். 

அதனைதொடர்ந்து கமல்ஹாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story