திண்டிவனத்தில் 3 பேர் பலியான வழக்கில் திடீர் திருப்பம்: சொத்து பிரச்சினையில் கொல்லப்பட்டார்களா? மூத்த மகனிடம் போலீசார் விசாரணை


திண்டிவனத்தில் 3 பேர் பலியான வழக்கில் திடீர் திருப்பம்: சொத்து பிரச்சினையில் கொல்லப்பட்டார்களா? மூத்த மகனிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 9:36 PM GMT)

திண்டிவனத்தில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் பலியான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்து பிரச்சினையில் கொல்லப்பட்டார்களா? என மூத்த மகனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி (52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன் (30), கவுதம் (27).

கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

3 பேர் பலி

கோவர்த்தனனுக்கு 6 மாதங் களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 14-ந் தேதி இரவு கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலையில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததால் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது.

ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மண்எண்ணெய் கேன்

இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாததால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து இருக்கலாம் என்று கூறினார்.

ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்த அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏ.சி.எந்திரம் வெடித்திருந்தால் முதலில் வெளிப்பகுதி முற்றிலுமாக சேதமாகி இருக்கும். ஆனால் ஏ.சி. எந்திரத்தின் உள்பகுதி மட்டுமே எரிந்த நிலையில் இருந்தது. இதனால் 3 பேரும் கொலை செய்யப்பட்டு, அதன் பிறகு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வெட்டு காயங்கள்

கலைச்செல்வியின் தம்பி ஜெய்சங்கர் போலீசாரிடம் கூறுகையில், ராஜி, கவுதமின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தன. 3 பேரையும் வெட்டி கொலை செய்து விட்டு, அதனை மறைக்க மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே குடும்பத்தில் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. கோவர்த்தனன் மற்றும் சில உறவினர்கள் மீது சந்தேகம் உள்ளது என்றார்.

இதையடுத்து கோவர்த்தனனை போலீசார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் 3 பேரும் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story