தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 May 2019 11:45 PM GMT (Updated: 17 May 2019 10:20 PM GMT)

தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் தன்னை இணைத்து உள்ளார். அவருக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறி உள்ளது. அதனால் கமல்ஹாசன் பேச்சு குறித்து பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். கோவில் கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் பெயரில் எம்.பி. என்று குறிப்பிட்டு இருப்பது பற்றி எனக்கு தெரியவில்லை. எனது கவனத்துக்கு அதுபோல தகவல் வரவில்லை.

குடிநீர் வழங்கப்படுகிறது

பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய தேர்தலுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் வறட்சியால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதோ, அந்த பகுதிகளில் குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மாவட்ட கலெக்டர் கையாள வேண்டும்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் அரசு முன்கூட்டியே ஒதுக்கி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா கூறி இருப்பது தவறான குற்றச்சாட்டு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள், ‘மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘இது தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இதெல்லாமே வருகிறது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் பிரச்சினைகள் எழாது’ என்றார்.

Next Story