தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்  -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 May 2019 5:50 PM GMT (Updated: 18 May 2019 5:50 PM GMT)

வெளிமாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இறுதியாண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற விஷம பிரசாரம் நடைபெறுகின்ற நேரத்தில், தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமானதாகும் என்றும், அதற்கான ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் அதில் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனைக் காக்க பல முறை இந்த அரசிடம் வலியுறுத்தினோமே. இனியாவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

Next Story