மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்து மகா சபா கோரிக்கை


மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்து மகா சபா கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2019 3:00 AM IST (Updated: 19 May 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவிப்பதால் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் விஷ்வ இந்து பரிஷத்தின் (தமிழ்நாடு) சென்னை மாவட்ட தலைவர் ஏ.ஆர்.ரவி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே” என்று பேசினார். ஓட்டுக்காக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக பேசியிருப்பது பெரும்பான்மையான இந்து மக்களின் உள்ளத்தை புண்படுத்தி உள்ளது.

சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாதவர் அவர். சில குழப்பம் காரணமாக அவர் அப்படி பேசுகிறார். இப்படி பேசுவதற்கு அவரை அனுமதித்தால் மதரீதியான குழப்பங்கள் ஏற்பட்டுவிடும். எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்ய வேண்டும்

இதேபோல், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அகில பாரத இந்து மகாசபா அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாதுராம் கோட்சே பற்றி கமல்ஹாசன் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஓட்டுக்காக மத விரோதத்தை உருவாக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். அதோடு, தான் பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும், தன்னை சிறையில் அடைத்தால் பதற்ற நிலை உருவாகும் என்றும் மிரட்டும் விதத்தில் அவர் பேசுகிறார்.

எனவே இறையாண்மையை பாதுகாக்க மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். அவரது வாக்குரிமையை வாழ்நாள் முழுவதும் தடை செய்ய வேண்டும். அவர் பிரசாரம் செய்த வேட்பாளர் மோகன்ராஜை (அரவக்குறிச்சி) தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story