ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 9:55 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக விவசாயிகள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்பட 247 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூரில் விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த ஜூன் மாதத்தில் அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளை திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Next Story