இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை நினைவு தினம்
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 10-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பூந்தமல்லி,
இலங்கையில் நடந்த போரில் ஏராளமான இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலை நடந்து 10-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
ஜூன் 1-ந்தேதி கூட்டம்
இலங்கையில் இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த இனப்படுகொலையை இலங்கை இனவெறி அரசும், இந்திய அரசும் செய்து முடித்தார்கள். தேர்தல் விதிமுறை இருப்பதால் கூட்டம் நடத்த முடியவில்லை.
ஜூன் 1-ந் தேதி நெல்லையில் இனப்படுகொலை குறித்த கூட்டம் நடைபெறும். விடுதலைப்புலிகள் மீது மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டித்து இருப்பது மக்களின் எழுச்சியை தடைசெய்ய நடந்துள்ளது.
வரலாற்று பூர்வமான உண்மை
நடிகர் கமல்ஹாசன் கூறியது வரலாற்று பூர்வமான உண்மை. கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரா?, இல்லையா?. தமிழர்கள் என்றால் பயங்கரவாதி என்று காட்டும் நடவடிக்கைகளைத்தான் நாம் எதிர்க்கிறோம். சாதி, மதம் என நமது கவனத்தை திசை திருப்பி 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பேச யாரும் இல்லை.
சாதி, மதம் மனிதனை காப்பாற்றாது. அதனைத்தான் மனிதன் காப்பாற்றி வைத்துள்ளான். தமிழகம் போர்க்களமாக மாறப்போகிறது. 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக மாறிவிட்டது. தண்ணீர், சந்தை பொருளாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story