சென்னை வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியதால் குழப்பம்


சென்னை வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியதால் குழப்பம்
x
தினத்தந்தி 19 May 2019 11:06 PM GMT (Updated: 19 May 2019 11:06 PM GMT)

திருச்செந்தூரில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகளும் ஏறியதால் கடும் குழப்பம் நிலவியது. கழிவறையும் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதனால், பஸ் - ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரும் ரெயில்களில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டத்தை கண்டு அச்சப்படும் பலர் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்து ரெயில்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும்போது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாலும் டிக்கெட் பரிசோதகரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் செல்கின்றனர்.

ஆனால், பாதுகாப்பான ரெயில் பயணம் என்பது தற்போது மோசமாகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு பெட்டிகளிலும் பெரியவர்கள், குழந்தைகள் என இருக்கை முழுவதும் கூட்டம் இருந்தது.

டிக்கெட் பரிசோதகரும் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்டை சரிபார்த்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால், ரெயில் திருச்சி வந்தபோது, முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்திருந்த பயணிகள் ஏறத் தொடங்கினார்கள். அப்போது, ரெயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர், தங்கள் அருகே யாரோ வந்து நிற்பதை உணர்ந்து, கண்விழித்து அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக, எஸ்-6, எஸ்-7, எஸ்-8, எஸ்-9 ஆகிய 4 முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பேர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். சிலர், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே அமர்ந்துகொண்டனர். இந்த சம்பவத்தால் ரெயிலில் குழப்பம் ஏற்பட தொடங்கியது. ஒரு சில முன்பதிவு பயணிகள், சாதாரண டிக்கெட்டுடன் ஏறிய பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வந்த ரெயில் நிலையங்களிலும் இதேபோல், பயணிகள் பலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறியதால் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்தது. முன்பதிவு பயணிகளுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் டிக்கெட் பரிசோதகரும், ரெயில்வே போலீசாரும் அங்கு வரவில்லை. இதனால், ரெயிலில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்தது.

இதற்கிடையே, எஸ்-8 பெட்டியில் உள்ள கழிவறையில் ஒருவர் சென்று படுத்து தூங்கிவிட்டார். இதனால், இரவு நேரத்தில் கழிவறையை பயன்படுத்த சென்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையில் தூங்கியவரை எழுப்ப முயன்றும் பயனில்லை. அவர் மது போதையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து, ரெயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கூறியதாவது:-
ரெயிலில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முன்பதிவு செய்து பயணம் செய்கிறோம். ஆனால், பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை ரெயில்வே நிர்வாகம் வழங்குவதில்லை. பொதுவாக, வடமாநிலங்களில் தான் இதுபோன்று முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏறி சிரமத்தை கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டிலும் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

நாங்கள் வந்த முன்பதிவு பெட்டியில் திருச்சியில் இருந்தே முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏறினார்கள். எங்களுடன் பயணித்த சிலர் தடுத்தும் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, ரெயில் பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர். இதனால், எங்களுடைய தூக்கமே போய்விட்டது. டிக்கெட் பரிசோதகரும், ரெயில்வே போலீசாரும் அங்கு வரவே இல்லை. இனியாவது, ரெயில்வே நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டுமல்லாமல், பல ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் இதுபோன்று முன்பதிவில்லாத டிக்கெட்டை வைத்துக் கொண்டு பயணிகள் பலர் ஏறுவதால், குழப்பம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

Next Story