வாக்கு எண்ணிக்கைக்கு ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு


வாக்கு எண்ணிக்கைக்கு ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 22 May 2019 2:56 AM IST (Updated: 22 May 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகள் அனைத்து தொகுதிகளிலும் எண்ணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சென்னை,

‘வி.வி.பேட்’ எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகள் அனைத்து தொகுதிகளிலும் எண்ணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படிதான் ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்காக 5 வாக்குச்சாவடி மையங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். இதுகுறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்படும்.

சட்டமன்ற தொகுதி, நாடாளுமன்ற தொகுதி எண், பெயர், வாக்குப்பதிவு நடந்த தேதி, வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் ஒரு அங்குல நீளம், அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்கு பயன்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவுக்குரிய கட்டுப்பாட்டு கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளை பெற முடியாத சூழல் ஏற்படும்போதும், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றிருந்தால், கட்டுப்பாட்டு கருவியில் உள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் ‘17-சி’யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபட்டிருந்தால் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பீட்டு பார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story