சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் 27-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் 27-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 2019-05-22T03:01:10+05:30)

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

சென்னை,

பருவமழை பொய்த்ததன் விளைவாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. தற்போது ஏரிகள் முற்றிலும் வறண்டு போக தொடங்கிவிட்டன. இதனால் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு குழாய்களில் தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகின்றன.

இதனால் குடிநீருக்காக மக்கள் செய்வதறியாது தவிக் கின்றனர். தற்போதைய சூழலில் தண்ணீர் லாரிகளே மக்களுக்கு கடவுளாக காட்சி தருகின்றன. எப்போது தண்ணீர் லாரிகள் கண்ணில் பட்டாலும் ஓட்டமாக ஓடி போதிய தண்ணீர் பிடித்துவந்தால் போதும், அன்றைய மிகப்பெரிய சாதனையாக அக்கம்பக்கத்தினருடன் பெருமை பேசிக்கொள்கின்றனர்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் முறையாக குடிநீர் வாரியத்திடம் முன்பதிவு செய்து தங்கள் குடியிருப்புகளுக்கு அவ்வப்போது குடிநீர் பெற்று பணத்துக்கு இணையாக சிக்கனமாக குடிநீரை செலவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இந்த நடைமுறைக்கு முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கையேந்தி நிற்கிறோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது.

‘நீரை கனிம வளத்தில் சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’ என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீரை கனிம வளத்தில் சேர்க்கமுடியாது. மலைகளை வெட்டினால் வளராது. ஆனால் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தவிர இதுவும் ஒருவகையில் மக்கள் சேவைதான். அதுவும் இந்த சூழ்நிலையில் எங்கள் பணி இன்றியமையாத ஒன்று.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே 27-ந்தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் இயங்காது.

எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரும் பட்சத்தில் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சந்தர்ப்பம் பார்த்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எங்களை மேலும் சோதிக்கிறார்கள். ஏற்கனவே தண்ணீர் பெற படாதபாடு படுகிறோம். இதில் இந்த பிரச்சினை வேறு... தலைநகருக்கும், தண்ணீர் தட்டுப்பாடுக்கும் இடையேயான சோகமான உறவு என்றைக்கு முடிவு பெற போகிறதோ...” என்று வேதனை தெரிவித்தனர்.

Next Story