குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனி அமைச்சகம் ஏற்படுத்த மோடி திட்டம் : சரத்குமார் பேட்டி
குடிநீர் பிரச்சினையை போக்க மத்தியில் தனி அமைச்சகம் ஏற்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்தது.
மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் எப்படி செயல்பட்டது?. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எப்படி செயல்பட வேண்டும்?. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் உயர எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி ஒற்றுமையாக செயல்படுவது போன்ற கருத்துகள் இந்த கூட்டத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
குடிநீர் பிரச்சினை குறித்து பிரதமர் மற்றும் உத்தவ்தாக்கரே ஆகியோர் பேசினார்கள். குடிநீருக்காக மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று மோடி திட்டமிட்டு உள்ளார்.
இந்தியாவில் நதிகள் இணைப்பு சாத்தியமா? என்று தெரியாது. நதிகளை தேசியமயமாக்கினால் நதி நீர் பங்கீடு சிறப்பாக இருக்கும். இதற்காக முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. வருங்கால திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தான் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். வலிமையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தனிப்பெரும்பான்மை பெற்று வந்தாலும் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று பிரதமர் கூறியது சிறப்பாக இருந்தது. சேலம் 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு செயல்படுத்தப்படும் என்ற வகையில் முதல்-அமைச்சர் கூறியிருக்கலாம்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
Related Tags :
Next Story