தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் மனு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க. ஊழல் புகார்


தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் மனு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க. ஊழல் புகார்
x
தினத்தந்தி 23 May 2019 5:34 AM IST (Updated: 23 May 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க. சார்பில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ஊழல் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை, 

ராதாபுரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைப்படி தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 12 மாநகராட்சிகள் அனைத்திலும் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைத்ததிலும், மின் கம்பங்களில் தரை இணைப்பு (எர்த் ஓயர்) அமைத்ததிலும் ரூ.1,811 கோடி ஊழல் நடந்துள்ளது.

ஊராட்சிகளில் உள்ள 3 மற்றும் 9-ம் எண் வங்கி கணக்குகளில் உள்ள நிதிகள் மக்களின் அடிப்படை வசதியான குடிநீர், சாலை போன்ற திட்டப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஊராட்சி நிதி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிகாரிகளும் அமைச்சரோடு இணைந்து உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அமைச்சர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை மீட்டு அரசு கருவூலத்தில் சேர்த்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக கவர்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு பதிவு தபாலில் மனு அனுப்பி உள்ளேன். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்களையும் அளித்துள்ளேன்.

எனது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், ஐகோர்ட்டுக்கு சென்று சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story