மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா? + "||" + By-election in Tamil Nadu: 22 Assembly seats results in thrilling expectations

தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா?

தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா?
அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது.

இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க உள்ளது. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்விக்கும் விடையளிக்க இருக்கிறது.

234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.

ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.

போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. 22 இடங்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மிக எளிதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்.

அதேநேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் (தி.மு.க.-88, காங்கிரஸ்-8, இ.யூ.மு.லீக்-1) உள்ளனர். டி.டி.வி. தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

ஆளுங்கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையே சொற்பமான எண்ணிக்கையிலான வித்தியாசம் இருப்பதால் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. காலை 9 மணி முதல் முன்னணி நிலவரங்கள் வெளியாக உள்ளது.

அதன்பிறகே அ.தி.மு.க. ஆட்சி தப்புமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் ‘செயலி’ : இணையதளத்திலும் பதிவேற்றம்

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையின் நிலவரங்கள் ஒவ்வொரு சுற்றுவாரியாக அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘ஓட்டு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன் https://results.eci.gov.in, http://elections.tn.gov.in/results2019 ஆகிய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். Voter Helpline என்ற தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்தும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை அறிந்துக்கொள்ளலாம்’ என்றார்.