மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி + "||" + DMK wins by fault propaganda in parliamentary election: Interview with Minister D.Jayakumar

நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 38-வது நினைவுதினத்தையொட்டி, எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் 3-ந்தேதி எங்கள் (தி.மு.க.) ஆட்சி மலரும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று துரைமுருகன் கூறினார். மு.க.ஸ்டாலினும் சொன்னார். அப்படி நடக்கவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாரா? என்று நான் சவால் விட்டேன். இப்போது அ.தி.மு.க. ஆட்சி தொடர்கிறது. தற்போது ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?.

இடைத்தேர்தல் முடிவு தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரமாக தான் நாங்கள் பார்க்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாய பிம்பத்தை ஏற்படுத்தி, முழுமையாக பணத்தை செலவு செய்து வளைத்ததை போல, தமிழ்நாடு முழுவதையும் வளைத்துவிடலாம் என்று டி.டி.வி.தினகரன் நினைத்தார்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து, படுதோல்வியை அவர் அடைந்திருக்கிறார். இதன் மூலம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்றைக்கு நாங்கள் தான் என்பதை அவர் நிரூபணம் செய்து இருக்கிறார்.

எனவே இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தான் கருதுகிறோம். தமிழக மக்களும், வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை தான் டி.டி.வி.தினகரனுக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது.

மீத்தேன், நீட், ஜி.எஸ்.டி. போன்றவற்றிற்கு வித்திட்டது தி.மு.க. தான். ஆனால் இதை நாங்கள் கொண்டு வந்தது போன்று தவறான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய், அது எடுபட்டுவிட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்வது போன்று, தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்வது தான் வாடிக்கையாகிவிட்டது. எனவே அங்கு (நாடாளுமன்றம்) போய் சட்டை, பனியனை கிழித்து வராமல் இருந்தால் நல்லது. ஒரு முதலையிடம் தேங்காய் இருந்தால், அது சட்னி அரைக்கவும் பயன்படாது. சாமிக்கு உடைக்கவும் பயன்படாது. அது போன்ற நிலைமை தான் இன்றைக்கு தி.மு.க.வுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், நான் உள்பட அனைவரும் சொன்னது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது என்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

தனி பெரும்பான்மையுடன் நாங்கள் 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்போம்.

நடிகர் சந்திரபாபு ஒரு படத்தில், ‘வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை’ என்று பாடுவார். எனவே இது தி.மு.க.வுக்கு ஒரு தற்காலிக வெற்றி தான். வருகிற தேர்தல் அனைத்திலும் அ.தி.மு.க. நிச்சயமாக மகத்தான வெற்றியை பெறும். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கட்சி ஆய்வு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அது கொள்கை முடிவு. கட்சி தான் முடிவு செய்யும்.’ என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். பேட்டியின்போது அமைச்சர் கே.பாண்டியராஜன் உடனிருந்தார்.