நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு; துணைத்தலைவர் கனிமொழி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு


நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு; துணைத்தலைவர் கனிமொழி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 25 May 2019 11:15 PM GMT (Updated: 25 May 2019 7:04 PM GMT)

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத்தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தயாநிதிமாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட 19 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் 7 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், ‘நமக்கு முழு ஆதரவு வழங்கியுள்ள மக்களின் குறைகளை போக்க வேண்டியது நம்முடைய கடமை. மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திலும், நேரமில்லா நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயல வேண்டும். நாடாளுமன்றம் நடக்காத நாட்களில் தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும். மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டி.ஆர்.பாலு தேர்வு

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு கூட்டம் முடிவில் வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

* தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைநோக்குடன் அமைத்த மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், இந்த வெற்றியை பெறுவதற்காக பாடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் இந்தக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

* அனல் பறக்கும் பிரசாரத்தில், அனுதினமும், அல்லும் பகலும் ஈடுபட்டு, 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கருணாநிதி ஈட்டித்தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த கூட்டம் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

*தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டிடவும், நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையே வழிகாட்டும் ஒளி விளக்குகளாகக் கொண்டு லட்சியப்பயணம் மேற்கொண்டிடவும், மக்களே நம் எஜமானர்கள், மக்களே நமது மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story