பொள்ளாச்சி பாலியல் வழக்கு; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு ‘வீடியோ’ பதிவு சி.பி.ஐ. விசாரணையில் உறுதியானது


பொள்ளாச்சி பாலியல் வழக்கு; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு ‘வீடியோ’ பதிவு சி.பி.ஐ. விசாரணையில் உறுதியானது
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 8:06 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டிருப்பது சி.பி.ஐ. விசாரணையில் உறுதியானது.

சென்னை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து ‘வீடியோ’ எடுத்தது தொடர்பாக திருநாவுக்கரசு(வயது 26), சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார் (24), மணிவண்ணன்(28) ஆகிய 5 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசாருக்கு கடந்த மாதம் 28-ந்தேதி மாற்றப்பட்டது. சி.பி.ஐ. போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கைதான 5 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு சம்பந்தமாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களையும், ஆதாரங்களையும் திரட்டினர். இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கின் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தனர்.

குற்றம் உறுதியானது

இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இளம்பெண்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் கற்பழிப்பதை நோக்கமாக கொண்டு இந்த 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கிறது. பாலியல் இச்சைக்கு ஆளாக்கப்படும் பெண்களை ரகசியமாக அந்த கும்பலில் இருந்த நபரே பல்வேறு கோணங்களில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களை முக்கிய ஆதாரமாக இந்த கும்பல் பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்த சம்பவத்தை பற்றி பெற்றோர் மற்றும் வேறு யாரிடமோ சொல்ல முயற்சித்தால் இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவிடுவோம் என்றும் அந்த கும்பல் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

பின்னணியில் யார்?

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது அந்த 5 பேர் கொண்ட கும்பல்தான் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும், சூழ்நிலை ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். பெண்களிடம் தங்கள் இச்சைகளை தீர்ப்பதற்கு முன்பும், தீர்த்த பின்பும் இந்த 5 பேரும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்துள்ளதையும் கண்டறிந்து உள்ளோம். எனவே பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் இந்த 5 பேரும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகவே தெரிகிறது.

இந்த விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசியமாக கொடுத்திருக்கும் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கின் பின்னணியில் உள்ளோர் மற்றும் தொடர்புடையவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

முக்கிய ஆதாரங்கள்

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு 2 வழக்குகள் பதியப்பட்டன. அதனைத்தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக குற்றவாளிகளின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அந்த செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட மற்றும் சேமிக்கப்பட்ட பல்வேறு தகவல்கள் இந்த குற்றத்தில் இவர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய ஆதாரங்களாகவே அமைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story