நதிநீர் இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்


நதிநீர் இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 30 May 2019 10:00 PM GMT (Updated: 30 May 2019 8:52 PM GMT)

நதிநீர் இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஆலந்தூர்,

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்று உள்ள நிலையில், ‘தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதற்காக கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதுதான் எனது முதல் பணி’ என மத்திய மந்திரி நிதின் கட்காரி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு தமிழக அரசும், பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த திட்டம் சாத்தியமற்றது என பல தரப்பில் இருந்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

காவிரி பிரச்சினை

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

நதிநீர் இணைப்பு திட்டம் என்பது சாத்தியமானது தான். இது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆணையத்தில் எடுத்து சொல்லப்பட்டது. மேகதாது அணை விவகாரத்தை ஆணையத்திற்கு கொண்டு வரவே கூடாது. ஜூன் மாதத்திற்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறியுள்ளனர்.

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி

ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணம் ஆகிறது. சந்திரபாபு நாயுடுவை சார்ந்து இருந்த ஸ்டாலின் அங்கு காட்சிகள் மாறியதும் ஜெகன்மோகன் பதவியேற்பில் கலந்து கொண்டுள்ளார். மத்திய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஜெகன்மோகன் ரெட்டியின் விழாவில் பங்கேற்றது சந்தர்ப்பவாதம் ஆகும்.

தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ‘உங்களுடைய காட்சியை நீங்கள் காண்பித்துவிட்டீர்கள், இனிமேல் எங்கள் காட்சியை பார்க்க போகிறீர்கள்’ என்று ஒரு படத்தில் எம்.ஜி.ஆர். சொன்னது போல் 2 ஆண்டுகளில் எங்கள் காட்சியை பார்ப்பார்கள்.

தோல்வி குறித்து ஆய்வு

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பதவி என்பது இரண்டாம் பட்சம்தான். யாரையும் பதவி கேட்டு அணுகுவது கிடையாது. மத்திய அரசில் பங்கேற்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்.

டி.டி.வி.தினகரன் தன்னை ஹீரோவாக சித்தரிக்க எவ்வளவோ கோடி கோடியாய் செலவு செய்து பிம்பத்தை உருவாக்கினார். ஆனால் அவர் ஜீரோவாக மாறிவிட்டார். எப்படி ஜீரோ ஆனது என்று ஆராய்ச்சி நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து கட்சி கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story