தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது -மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இருமொழிக்கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி மும்மொழி திட்டத்தை கொண்டு வர நினைக்கக்கூடாது. மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று பாஜக அரசு கனவில் கூட நினைக்க கூடாது. தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக வீர வணக்கம் செலுத்தி வருவதை பாஜக அரசு மறந்து விட்டதோ?
தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்படத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது. அன்னைத்தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது.
புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு வரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படை நோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை.
மீண்டுமொரு மொழிப்போராட்டத்திற்கு பாஜக அரசு வழி அமைத்து விடாது என இன்னும் நம்புகிறேன். மும்மொழி திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பேராசைக்கனவும், அதற்காக பிழையான காரியமும் பேரிடரை ஏற்படுத்தி விடும்.
மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்படத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! இதுகுறித்து கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story