ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரசவம் பார்த்ததால் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகை


ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரசவம் பார்த்ததால் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2019 1:39 AM IST (Updated: 3 Jun 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு நர்சு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் பெருகமணியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி அயிணா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் ஆகிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அயிணாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பச்சைநாச்சி மற்றும் ஊழியர் சந்திரா ஆகியோர் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை அயிணாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

நர்சு மற்றும் ஊழியர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டதால் டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த டாக்டர், குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு பிரசவம் பார்த்தார். எனினும் அயிணாவுக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அயிணாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ, திருச்சி அரசு மருத்துவமனைக்கோ அயிணாவை, இரவு பணியில் இருந்த நர்சு அனுப்பியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இனி வரும் காலங்களில் இது போன்று நர்சு பிரசவம் பார்ப்பதை தடுக்க வேண்டும் என்றனர். பணியில் இருந்த நர்சிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மருத்துவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story