சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2019 4:00 AM IST (Updated: 5 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள பாரம்பரியமான, பழமையான கோவில்களில் இருந்து சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த சிலை கடத்தலில், சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் போலீஸ் அதிகாரிகளும் கூட்டணி வைத்து செயல்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிலை கடத்தல் தொடர்பான அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு ஒன்றை ஐகோர்ட்டு அமைத்தது.

பொன் மாணிக்கவேல்

இந்த சிறப்பு அமர்வு நீதிபதிகள்தான், சிலை கடத்தல் தொடர்பான ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட அனைத்து வகையான வழக்குகளையும் விசாரித்து வந்தனர். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்றும் இந்த அமர்வுதான் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்ற பின்னர், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க அவரை சிறப்பு அதிகாரியாக நியமித்ததும் இந்த சிறப்பு அமர்வுதான். இந்த நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வை திடீரென கலைத்து ஐகோர்ட்டு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு அமர்வு கலைப்பு

இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சாமி சிலைகள், கோவிலுக்கு சொந்தமான தங்கநகைகள், விலை உயர்ந்த பொருட்கள், அசையும் சொத்துகள் காணாமல் போனது குறித்தும், அதுதொடர்பான பொதுநல வழக்குகளும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால், இந்த வழக்குகளை எல்லாம் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைத்து கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவு மாற்றி அமைக்கப்படுகிறது.

இனிமேல் சிலை கடத்தல், கோவில் நகைகள், சொத்துகள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை சிறப்பு அமர்வு விசாரிக்காது. அந்த வழக்குகள் எல்லாம் ஐகோர்ட்டில் சம்பந்தப்பட்ட (போர்ட்போலியோ) நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story