இன்று ரம்ஜான் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளனர்.
சென்னை,
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புனித ரம்ஜான் மாதத்தின் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் பகலில் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறை உணர்வோடு நோன்பிருந்து, ஏழை மக்களின் பசியாற உணவு அளித்து, அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.
அன்பு, அமைதி
இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு, புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த புனித ரம்ஜான் பெருநாளில் உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, என் அன்புக்குரிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அனைத்து வகையிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் மனமார்ந்த ரம்ஜான் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க.வினுடைய அரசு தான்.
அந்த உறவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும், எதிர்குரல் கொடுக்கும் இயக்கமாக என் தலைமையில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
சிறுபான்மையின மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்கு எங்கிருந்து எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தடுத்து நிற்கும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பாதுகாப்பு கவசமாக தி.மு.க. தொடர்ந்து செயலாற்றிடும் என்று உறுதியளித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
இதேபோல, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து
இதேபோல தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன்,
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், அகில இந்திய மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன்,
மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவர் சேம.நாராயணன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழக ஜனநாயக ஜனதாதள மாநில தலைவர் டி.ராஜகோபால், ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story