கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்


கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 6 Jun 2019 5:45 AM IST (Updated: 6 Jun 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ‘நிபா’ காய்ச்சல் பரவாமல் தடுக்க, அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

சென்னை, 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது.

‘நிபா’ வைரஸ்

இந்த நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பு 17 பேர் பலியானார்கள். இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவில் மீண்டும் பரவி வருகிறது.

இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இதற்காக எல்லை பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

மருத்துவ பரிசோதனை

கேரள எல்லையையொட்டி கோவை மாவட்டம் அமைந்து இருப்பதால் அங்கிருந்து கோவைக்கு வருபவர்களின் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து கோவைக்கு பஸ்களில் வரும் பயணிகளுக்கு எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

அத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக வருபவர்களுக்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அதிக அளவில் வவ்வால்கள் இருப்பதால் அங்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்த்துறை எடுத்து வருகிறது. கடந்த முறை கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்கியபோதும், அண்டை மாநிலங்களில் ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு இருந்தபோதும் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. அந்த நிலையைத்தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். தொடர்ந்து இந்த நிலையை உறுதிபடுத்துவதற்கு அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

வவ்வால் கடித்த பழங்கள் மூலம் இந்த ‘நிபா’ வைரஸ் மனிதனுக்கு தொற்றி, பின்னர் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இது பரவ ஆரம்பிக்கும். எனவே பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்பிட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கேரளாவில் இந்த தொற்று பாதிப்பு இருப்பதால், தமிழகம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

எல்லையோர மாவட்டங்கள்

நெல்லை, கன்னியாகுமரி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் போன்ற கேரளாவையொட்டிய மாவட்டங்களில் நாளை (இன்று) முதல் சிறப்பு மருத்துவ குழுவினர் பணிகளை தொடங்க உள்ளனர். நடமாடும் மருத்துவ குழுக்களும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை எல்லையிலேயே பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

‘நிபா’ வைரஸ் தாக்கினால் காய்ச்சல் மற்றும் மூளை காய்ச்சல் பாதிப்புகள் தென்படும். தொண்டை வலியில் ஆரம்பித்து மரணம் நேரிடும் ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்புகளால் அவதிப்படுவோரை கண்காணிக்க பணிகளை சுகாதாரத்துறை முடுக்கி விட்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து 24 மணி நேரமும் காய்ச்சல் பாதிப்பு விவரங்களை பெற்று வருகிறோம். இதுவரை தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலோ அல்லது பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளோ இல்லை. கடந்த முறை பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அதை எதிர்கொண்டோம். இந்த முறை ‘நிபா’ வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்துவித தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறோம். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம்.

ரத்தம் இருப்பு

தடுப்பு மருந்துகளால் தடுத்துவிடக்கூடிய எந்த நோயாக இருந்தாலும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி அதை தமிழக அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேவையான பிரிவுகளில் போதுமான ரத்தம் இருப்பு உள்ளது. எனவே அதுகுறித்து எந்த கவலையும் பட தேவையில்லை. இரவு நேரத்தில் தேவைப்பட்டாலும் போதுமான அளவு ரத்தம் பெற வசதி இருக்கிறது.

ரத்ததானம் செய்ய தயாராக இருப்போரின் விவரங்களும் தயாராக இருக்கிறது. ரூ.210 கோடிக்கு மெட்ரோ பிளட் பேங்க் திட்டம் (ரத்த வங்கி) நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் உலக நாடுகளுக்கு நாமே ரத்தம் வழங்கலாம். மேலும் மருந்து தட்டுப்பாட்டு என்ற நிலையும் இல்லவே இல்லை.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

நோயாளிகள் கண்காணிப்பு

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காய்ச்சல், மூளை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள 2,800 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கடுமையான மூளை காய்ச்சலுக்காக அதிகமானோர் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதார சேவைகளை சேர்ந்த அனைத்து துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருந்தால் நோயாளிகள் உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

தனி வார்டுகள்

தற்காலிகமாக தனி வார்டுகளை ஏற்படுத்துமாறும், மருந்துகள், ‘வென்டிலேட்டர்’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது இருப்பதை விடவும் கூடுதலாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொது சுகாதார இயக்குனரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து செய்தி சானல்களிலும் வெளியாகும் செய்திகள் மூலம் நோய் தடுப்பு மருந்து துறையினர் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்காணிப்பார்கள். பொதுமக்கள் 044-24350496, 24334811, 9444340496, 8754448477 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story