கடந்த ஆண்டை விட அதிகம்: ‘நீட்’ தேர்வில் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி
‘நீட்’ தேர்வில் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
சென்னை,
‘நீட்’ தேர்வில் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ராஜஸ்தான் மாணவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார்.
‘நீட்’ தேர்வு
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நீட் தேர்வை நடத்தியது. கடந்த மாதம் (மே) 5-ந்தேதி தேர்வு நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் கடந்த மாதம் 20-ந்தேதி தேர்வு நடந்தது.
நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது கடந்த ஆண்டை விட 14.52 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். அதில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 755 பேர் (92.85 சதவீதம்) தேர்வு எழுதினார்கள். 154 நகரங்களில் 2 ஆயிரத்து 546 மையங்களில் இந்த நீட் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு முடிவு வெளியீடு
இந்த நிலையில் நீட் தேர்வுக்கான முடிவு நேற்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலையில் நீட் நுழைவுத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து நீட் தேர்வு முடிவு மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பிற்பகல் 1.40 மணியளவிலேயே நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. www.nta.ac.in, www.nta-n-eet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து நீட் தேர்வு மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
56.50 சதவீதம் பேர் தேர்ச்சி
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 755 பேர் தேர்வு எழுதியதில், 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தகுதி பெற்று இருக்கின்றனர்.
தகுதி பெற்றவர்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 278 பேர் ஆண்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 761 பேர் பெண்களும், 3 திருநங்கைகளும் அடங்குவார்கள். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மொத்தத்தில் தேர்ச்சி சதவீதம் 56.50 ஆகும்.
கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி மதிப்பெண்கள்
பொதுப்பிரிவினரில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 245 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 635 பேரும், எஸ்.சி. பிரிவினரில் 99 ஆயிரத்து 890 பேரும், எஸ்.டி. பிரிவில் 35 ஆயிரத்து 272 பேரும் நீட் தேர்வில் தகுதி பெற்று இருக்கின்றனர்.
பொதுப்பிரிவினருக்கு 134 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 107 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் ஆகும்.
ராஜஸ்தான் மாணவர் முதல் இடம்
இந்தியாவில் நீட் தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவர் 720-க்கு 701 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். டெல்லியை சேர்ந்த பவிக் பன்சல் என்ற மாணவர் 700 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அக்ஷத் கவுசிக் என்ற மாணவர் 700 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று இருக்கின்றனர்.
முதல் 6 இடங்களை மாணவர்களே தக்க வைத்துள்ளனர். 7-வது இடத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாதுரி ரெட்டி என்ற மாணவி இருக்கிறார்.
தமிழகத்தில் சுருதி முதல் இடம்
டெல்லி, அரியானா, ஆந்திரா, சண்டிகரில் 70 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங் கானா, உத்தரகாண்ட்டில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
நீட் தேர்வில் தமிழகத்தில் மாணவி கே.சுருதி 720-க்கு 685 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்து இருக்கிறார். இவர் அகில இந்திய அளவில் 57-வது இடத்தை பெற்று இருக்கிறார். மேலும், பெண்கள் பட்டியலில் முதல் 20 பேரில் 10-வது இடத்தை அவர் பெற்று உள்ளார்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக மாணவர் கே.கே.கார்வண்ண பிரபு 5-ம் இடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 15,623-வது இடத்தை அவர் பிடித்து இருக்கிறார்.
மருத்துவ படிப்புக்கான இடங்களில் அரசு கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மீதமுள்ள 85 சதவீதம் இடங்களுக்கும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக விண்ணப்பிக்கும் தேதியை தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு அறிவிக்கும்.
Related Tags :
Next Story