காற்று மாசை கட்டுப்படுத்த உறுதி எடுக்க வேண்டும் பொதுமக்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள்


காற்று மாசை கட்டுப்படுத்த உறுதி எடுக்க வேண்டும் பொதுமக்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:45 AM IST (Updated: 7 Jun 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

காற்று மாசை கட்டுப்படுத்த பொதுமக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு சுமார் 70 சதவீதத்துக்கு மேல் வாகன புகையால் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்றுமாசை கட்டுப்படுத்துதல் பெரும் சவாலான பணியாகவே உள்ளது. உலகளவில் காற்றுமாசுபாட்டில் முன்னணியில் உள்ள 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரு நகரங்களில் காற்று மாசில் 2.5 மைக்ரான் மற்றும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவுகள் இருப்பது கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசு இறப்புகள் பெரும்பாலும் இருதய நோய், பாரிசநோய், சுவாச கோளாறு நோய்கள் மற்றும் நுரையீரல் புற்று நோயால் ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்றவற்றைவிட சென்னை மாநகரின் காற்று மாசுப்பாடு குறைந்தே காணப்படுகிறது.

நுண்துகள்கள் 


காற்று மாசுப்பாட்டை கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தேசிய காற்று தர ஆய்வு திட்டத்தின் கீழ் 8 இடங்களில் காற்று மாதிரிகள் சேகரித்தது. காற்று மாசுகளான கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, நுண்துகள் 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் ஆகியவை அளவிடப்பட்டு வருகின்றன.

இத்தகைய கண்காணிப்பின்படி சென்னை நகரில் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியன ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டே காணப்படுகின்றன. மேலும் 2.5 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் ஆண்டு சராசரி அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டுதான் இருக்கின்றன. ஆனாலும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவீடுகளின் ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது.

விழிப்புணர்வு 


பெரும்பாலும் இதற்கான காரணங்கள் சென்னை நகரில் பெருகிவரும் வாகனங்களால் வெளியிடப்பட்டு புகை மற்றும் வளர்ச்சி திட்டங்களின் அடிப்படையில் நடைபெறும் கட்டுமான பணிகள் மற்றும் சாலைகளில் வாகன மற்றும் பாதசாரிகளின் பயன்பாட்டால் மறு சுழற்சியினால் ஏற்படும் துகள் மாசுகள் முக்கிய காரணங்களாகும். வாகனப்புகையை கட்டுப்படுத்த தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

காற்று மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிற நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தீபாவளி மற்றும் போகி போன்ற பண்டிகை காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் காற்று மாசு பெருமளவு குறைந்தது என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, மக்களின் வாழ்வு சிறக்க காற்று மாசை அனைவரும் சேர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சியை இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story