25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை


25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 7 Jun 2019 3:00 AM IST (Updated: 7 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவ–மாணவிகள் படிக்க கடந்த ஏப்ரல் மாதம் 22–ந் தேதி முதல் கடந்த மாதம் (மே) 18–ந் தேதி வரை ஆன்லைனில் பெற்றோர் விண்ணப்பித்தனர்.

சென்னை, 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவ–மாணவிகள் படிக்க கடந்த ஏப்ரல் மாதம் 22–ந் தேதி முதல் கடந்த மாதம் (மே) 18–ந் தேதி வரை ஆன்லைனில் பெற்றோர் விண்ணப்பித்தனர். இந்த இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் சிறப்பு பிரிவு மாணவர்களான 480 பேருக்கு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. அதேபோல், இடஒதுக்கீட்டுக்கு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அந்த பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவ–மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர்.

இந்தநிலையில் இடஒதுக்கீட்டை விட அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது. அந்த பள்ளிகளில் எத்தனை பேர் சேர்ந்து இருக்கின்றனர் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Next Story