தொடர்ந்து தங்கம் விலை உயர்வு: ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது


தொடர்ந்து தங்கம் விலை உயர்வு: ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது
x
தினத்தந்தி 7 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விலை உயர்வு காரணமாக தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (மே) தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த மாதம் 22-ந்தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த 4-ந்தேதி ஒரு பவுனுக்கு ரூ.168-ம், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.152-ம் என தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்றும் அதன் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. கடந்த 10 நாட்களில் ஒரு பவுன் ரூ.680 வரை உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 116-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 928-க்கும் தங்கம் விலை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 6-ம், பவுனுக்கு ரூ.48-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 122-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 976-க்கும் விற்பனை ஆனது.

ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது

தங்கம் விலை இன்றும் (வெள்ளிக்கிழமை) உயரும் பட்சத்தில், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட்டுவிடும். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 129-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 32-க்கும் விற்பனை ஆனது.

அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே சென்றது. அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 230-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 840-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் தற்போது விலை உயர்வு காரணமாக, ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை மீண்டும் தொடுகிறது. அதன்பின்னரும், விலை உயரும் என்றே தங்கம் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார போர்

இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி நிருபர்களிடம் கூறுகையில், ‘அமெரிக்கா, சீன பொருட்கள் மீது மறைமுகமாக பொருளாதார தடைவிதித்து கூடுதலாக சுங்கவரி விதித்து வருகிறது. அதேபோல், சீனாவும் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கிறது. இப்படியாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார போர் நிலவுகிறது. அதன் தாக்கம் காரணமாகவே தங்கம் விலை உயருகிறது. இந்த தாக்கம் நீடிக்கும் வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கும்’ என்றார்.

Next Story