7 பேர் விடுதலை விவகாரம்: தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது - எடப்பாடி பழனிசாமி


7 பேர் விடுதலை விவகாரம்:  தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 Jun 2019 5:30 AM IST (Updated: 7 Jun 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

7 பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது என்று கோவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை, 

சேலத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததின் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை கூட்டம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த தொகுதிகளில் தான் அ.தி.மு.க. போட்டியிட்டது. அப்படியென்றால் வாக்குகள் குறையும் அல்லவா. எனவே அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டால் அதிக வாக்குகள் கிடைக்கும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எனவே அ.தி.மு.க.வுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது என்பது சரியல்ல.

எங்கே பணம் இருக்கிறது?

ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். மாதம் ரூ.6 ஆயிரம் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். மாதம் ரூ.6 ஆயிரம் என்றால் இந்தியா முழுவதும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வேண்டும். பச்சை பொய்யை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களின் மனநிலையை மாற்றி, ஏமாற்றி வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதைப்போல கல்விக்கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும். நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். இதற்கெல்லாம் எங்கே பணம் இருக்கிறது.?

ஆனால் ஆளுகிற அ.தி.மு.க. அரசு எதை நடைமுறைப்படுத்த முடியுமோ, மக்களுக்கு எது நன்மைபயக்குமோ, அவற்றை தான் நாங்கள் அறிவித்தோம். ஆகவே எதிர்க்கட்சியினர் வேண்டுமென்று சொல்லிவிட்டு இப்போது ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதரிக்கவில்லை

மும்மொழி கொள்கையை முதல்-அமைச்சர் ஆதரிக்கிறார் என்று ஒருசில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறேன் என்று நான் எந்த பத்திரிகையிலும், ஊடகத்திலும் சொல்லவில்லை.

நான் டுவிட்டரில் தான் கருத்து சொன்னேன். டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது அங்கே இருக்கிற தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது நானும் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து என்ன கோரிக்கை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் எங்கள் குழந்தைகள் தமிழ் கல்வியில் பயின்று வருகிறார்கள். அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு ஆசிரியர் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக தமிழ் படித்து வருகிறார்கள். இப்படி தமிழ் பேசுகிற நம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேறு மாநிலத்தில் வசிக்கிற போது தமிழ் வழியில் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அனைத்து மாநிலங்களிலும் விருப்ப பாடமாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசியல் ஆதாயம்

நான் டுவிட்டரில் தெளிவாக சொல்லியுள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது. வேறு மாநிலங்களில் தமிழ் பேசுகிறவர்கள் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை தமிழ்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களின் ஆசையை ஏற்று விருப்ப பாடமாக உருவாக்கி தரவேண்டும் என்று தான் பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன்.

உடனே பத்திரிகையில் மும்மொழி கொள்கையை முதல்- அமைச்சர் எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா, அல்லது மறைமுகமாக ஆதரிக்கிறாரா என்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் தெளிவாக சொல்லி உள்ளார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் நடைபெறுகிற இந்த ஆட்சி இருமொழி கொள்கையைத்தான் பின்பற்றி நடக்கும். அதில் உறுதியாக இருக்கிறோம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக நான் சொன்ன கருத்தை திரித்து அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இப்படி செய்தி வெளியிட்டுள்ளனர். இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

காவிரி தண்ணீர்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆனவுடன் முதல் வேலையாக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று பேசினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ன பதில் சொல்கிறார் என்று நான் கேட்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகியிருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறினார்கள். அவர்கள் இப்போது வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசி காவிரி தண்ணீர் பெற்றுத்தருவார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இங்கே இருக்கிற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாரிடம் எடுத்துச்சொல்லி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை கர்நாடக அணையில் இருந்து திறந்து விடமுயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு கருத்து தெரிவித்தாலே இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. அதனால் தான் உடனடியாக டுவிட்டர் பதிவை நீக்கினேன். அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். பத்திரிகையாளர் கள் கேட்டகேள்விக்கு தான் நான் பதில் சொன்னேன். இல்லையென்றால் நான் இதை சொல்லியிருக்கமாட்டேன்.

7 பேர் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். இந்த பிரச்சினையில் தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அமைச்சரவை கூட்டப்பட்டு அதில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்றும் மற்றவர்களை விடுதலை செய்ய தேவையில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அப்போது ஒரு முடிவை எடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது விடுதலை செய்யவில்லை என்று கேட்கிறார்கள். விடுதலை செய்யக் கூடாது என்று அமைச்சரவையில் முடிவு எடுத்து கையெழுத்திட்ட பிறகு இப்போது கேள்வி கேட்பதற்கு தி.மு.க.விற்கு என்ன உரிமை உள்ளது.? எங்களை பொறுத்தவரை தமிழக மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் வகையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே தமிழக மக்களின் கோரிக்கை அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்போம்.

அ.ம.மு.க.வில் இருந்து ஏராளமானவர்கள் விலகி தாய் கழகமான அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி் ஜெயராமன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

Next Story