யாருடைய நிலத்தையும் எடுத்து அரசு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
யாருடைய நிலத்தையும் எடுத்து அரசு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றாது என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்து இரண்டடுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இருதளங்களுடன் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் முதல்தள கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளன.
இதில் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் இருந்து அஸ்தம்பட்டி வரையிலான மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளன. இதை தவிர அஸ்தம்பட்டியில் இருந்து அழகாபுரம் போலீஸ் நிலையம் வரையிலான மேம்பால பணிகளும் நிறைவடைந்துள்ளன.
குரங்குச்சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரையிலான மேம்பால பணிகளும், அண்ணா பூங்காவில் இருந்து ஏ.வி.ஆர். ரவுண்டானா வரையிலான மேம்பால பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம் மற்றும் அஸ்தம்பட்டியில் இருந்து அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே வரையிலான (சாரதா கல்லூரி சாலை) மேம்பாலத்தின் மேற்பகுதியில் தார்ச்சாலை போடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் தி.மு.க. எம்.பி. பார்த்திபன், தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மக்கள் உயிரை காக்கவே சாலை திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனிநபரின் வசதிக்காக அல்ல. உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது . நீதிமன்ற தீர்ப்பில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். வளர்ச்சி மேம்பாடு, விபத்து ஏற்படாமல் இருக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சேலம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் பஸ் போர்ட் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சேலம்-செங்கப்பளி வரை நெடுஞ்சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம், தமிழகத்தில் போக்குவரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
Related Tags :
Next Story