மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு மாதத்தில் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு மாதத்தில் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மதுரை,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மணல் கடத்தலில் பிடிபட்ட வாகனங்களை விடுவிக்க வலியுறுத்தி, அவற்றின் உரிமையாளர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.
சிறப்பு கோர்ட்டுகள்
இந்த நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் வருமாறு:-
மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக மணல் கடத்தல் தொடர்பான வழக்கு களை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
ஒரு மாதத்தில் அறிவிப்பு
எனவே இன்னும் ஒரு மாதத்தில் மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளை அமைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கோர்ட்டே தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கும்.
மணல் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட வாகனங்களை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்த பல்வேறு மனுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
பள்ளிகளின் வசதியை மேம்படுத்த...
இந்த தொகையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அதனை அரசு பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story