நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக்கொள்ளை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக்கொள்ளை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் பலர் இந்த கட்டணக்கொள்ளையால், அப்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்., எம்.சிஎச் படிப்புகளுக்கு ரூ.12 ஆயிரமும், எம்.டி படிப்புக்கு 16,400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.11½ லட்சம் வரையும் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அரசு கல்லூரிகளை விட 300 மடங்கு வரையிலும், தனியார் கல்லூரிகளை விட 20 மடங்கு வரையிலும் அதிக கட்டணத்தை நிகர் நிலைப்பல்கலைக்கழகங்கள் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது சமூக அநீதி இல்லையா?.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்கவும், இனிவரும் ஆண்டுகளில் கட்டணத்தை நிர்ணயிக்கவும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை கொண்ட குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி, அரசு-தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். அதுவே சமூக நீதியை காப்பாற்றும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story