தாறுமாறாக ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது; 5 பேர் மீட்பு
பொங்கலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. அந்த காரில் இருந்த 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிப்பாளையம் டி.பி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன்(வயது 35). ஸ்டூடியோ உரிமையாளர். இவருடைய மனைவி கவிதா(30). இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சென்றாயனின் தங்கை சுதா(31), அவருடைய கணவர் தமிழ்செல்வன்(34), அவர்களது குழந்தைகள் நித்திஷ்(6), தர்ஷன்(2).
சென்றாயன், தனது மனைவி, தங்கை மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 5 பேருடன் ஒரு காரில் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். அந்த காரை சென்றாயன் ஓட்டி வந்தார்.
கிணற்றுக்குள் கார் பாய்ந்தது
நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த கார் தாராபுரம்-திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று தாறுமாறாக கார் சாலையோரம் இருந்த 40 அடி ஆழம் கொண்ட புதர் மண்டிய கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் 5 அடி அளவுக்கே தண்ணீர் இருந்ததால் கார் தண்ணீரில் மூழ்கவில்லை.
மீட்பு பணி
அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இது குறித்து அவினாசிலிங்கம்பாளையம் போலீசாருக்கும், பல்லடம் மற்றும் திருப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பல்லடத்தில் இருந்தும், திருப்பூரில் இருந்தும் தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
5 பேர் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது. அந்த கிரேனில் இருந்து மண் அள்ளப் பயன்படுத்தும் வட்டமான ரப்பர் கூடை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. கிரேனில் இருந்து கயிற்றை பிடித்தவாறு அவினாசிபாளையத்தை சேர்ந்த கோழிக்கடை ஆறுமுகம் என்பவர் கீழே இறங்கினார்.
அவர் கிணற்றுக்குள் காரின் மேல் நின்றிருந்தவர்களை ஒவ்வொருவராக கூடையில் ஏற்றி மேலே கொண்டு வந்தார். தீயணைப்பு வீரர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் சென்ற 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Related Tags :
Next Story