மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் கட்சியினருக்கு வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் அழைப்பு


மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் கட்சியினருக்கு வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் அழைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:30 AM IST (Updated: 9 Jun 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

மனித சங்கிலி போராட்டமானது, மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் வகையில் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளும் வகையில், மத்திய பா.ஜனதா அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹட்ரோ கார்பன், சாகர்மாலா, சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை, விளைநிலங்களில் கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில், மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மணி

வருகிற 12-ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு தரப்படும் எச்சரிக்கை மணி என்பதைத் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று மனித சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

மனிதச் சங்கிலி அறப்போர் வெற்றிகரமாக நடப்பதற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழுப்புரம், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த ஒரு மாதமாக தினசரி போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ‘பேரழிப்பிற்கு எதிரான இயக்கம்’ வருகிற 12-ந் தேதி நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” நடத்தும் மனிதசங்கிலிப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த போராட்டத்தில் பெருமளவு பங்கேற்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.நாராயணனும் மனித சங்கிலி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story