அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது - ஜவாஹிருல்லா


அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது - ஜவாஹிருல்லா
x
தினத்தந்தி 9 Jun 2019 9:04 AM GMT (Updated: 9 Jun 2019 9:04 AM GMT)

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.  அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை.  ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.  கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.  2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும்  நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம் என கூறினார்.

ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கே.சி. பழனிசாமி, குன்னம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஒரு கட்சிக்கு 2 தலைமை இருப்பது அந்த கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சிப்பது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ல் நடைபெறும் போராட்டத்திற்கு  மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story