நாகை வேதாரண்யம் கடற்பகுதியில் கடும் சூறைக்காற்று; 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


நாகை வேதாரண்யம் கடற்பகுதியில் கடும் சூறைக்காற்று; 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 10 Jun 2019 4:02 AM GMT (Updated: 10 Jun 2019 4:02 AM GMT)

நாகையில் வேதாரண்யம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசுவதால் இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர். மீன்பிடிக்கும் சீசனில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததால் மீனவர்கள் படகுகளையும், வலைகளையும் சரி செய்து வந்தனர். நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் குறிப்பிட்ட தூரம் சென்று மீன்பிடித்து வந்தனர். மற்ற மீனவர்கள் போதிய வருமானமின்றி இருந்து வந்தனர்.

இந்தநிலையில் மீனவர்கள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடுமையான சூறைக்காற்று வீசியது.  இதனால் படகுகள் கவிழ்ந்து விடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். பின்னர் ஒரளவு சகஜநிலை திரும்பியதால் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முதல் கடற்பகுதியில் 50 கி.மீட்டர் வேகத்தில் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். அப்போது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில பைபர் படகுகளில் கடல் நீர் புகுந்தது. உடனே அந்த படகுகளை கரைக்கு கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.  இந்நிலையில், இன்று தொடர்ந்து 2வது நாளாக நாகையில் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.  இதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

Next Story