குற்றாலத்தில் சீசன் தொடங்கியது : மெயின் அருவி-ஐந்தருவியில் தண்ணீர் கொட்டுகிறது


குற்றாலத்தில் சீசன் தொடங்கியது : மெயின் அருவி-ஐந்தருவியில் தண்ணீர் கொட்டுகிறது
x
தினத்தந்தி 10 Jun 2019 10:48 PM GMT (Updated: 10 Jun 2019 10:48 PM GMT)

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று தண்ணீர் கொட்டியது. சீசன் தொடங்கியதையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சீசன் தொடங்கிவிடும். சில வருடங்களில் மே இறுதியிலேயே சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாக நேற்று தொடங்கியது.

நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இடையிடையே இதமான வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் குற்றாலம் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் நேற்று காலை தண்ணீர் விழத்தொடங்கியது. இதுபற்றி அறிந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பின்னர் மாலை 3.50 மணி அளவில் மெயின் அருவியிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் அங்கும் படையெடுத்துச் சென்றனர். மாலையில் ஐந்தருவி, மெயின் அருவிகளில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மற்ற அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியதும் சீசன் முழுவீச்சில் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது, அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 130 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இது வினாடிக்கு 1,154 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 12.20 அடியில் இருந்து 20.40 அடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே நாளில் நீர்மட்டம் 8.20 அடி உயர்ந்தது. அணைக்கு உள்ளே இருக்கும் பாணதீர்த்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 77 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 275 கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது. 

Next Story