சென்னை, மதுரை மற்றும் கோவையில் முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


சென்னை, மதுரை மற்றும் கோவையில் முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் :  எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:56 PM GMT (Updated: 10 Jun 2019 11:56 PM GMT)

சென்னை, மதுரை மற்றும் கோவையில் முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்துத்துறை கமிஷனர் சி.சமயமூர்த்தி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வு நிறைவடைந்ததும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் எத்தனை ஆய்வு செய்யப்பட்டுள்ளன? பழுதான வாகனங்கள் எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

பதில்:- தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்களில் 31 ஆயிரத்து 143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,009 வானகங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்த பின்னர்தான் இயக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு, தற்போது சரி செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 1,433 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் ஆய்வு செய்த பின்னர்தான் அந்த பஸ்களில் பள்ளி குழந்தைகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

கேள்வி:- மாணவர்களுக்கு இலவச பயண அட்டை (பஸ் பாஸ்) இந்த வருடம் எப்போது வழங்கப்படும்?

பதில்:- கடந்த வருடம் 20 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பயண அட்டைகளை வழங்குவதற்கு தேவையான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் மாணவர்களுக்கு இலவச பயண அட்டையை முதல்-அமைச்சர் வழங்குவார்.

அதுவரை மாணவர்கள் சீருடையில் வந்தாலே பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். உரிய உத்தரவுகள் மூலமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் பழைய இலவச பயண அட்டையை காண்பித்தால் போதுமானது.

கேள்வி:- மின்சார பஸ்கள் எப்போது இயக்கப்படும், முதல் கட்டமாக இயக்கப்படவிருக்கும் பஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில்:- 2 ஆயிரம் மின்சார பஸ்களும், 12 ஆயிரம் ‘பி.எஸ்-6’ வகையிலான பஸ்களும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசினுடைய மானியத்தில் முதல் கட்டமாக சுமார் 500 மின்சார பஸ்களை சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

கேள்வி:- ஹெல்மெட் அணியாதவர்கள் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே..?

பதில்:- போக்குவரத்துத்துறை காவலர்களும், அதிகாரிகளும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த பல லட்சம் பேருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

கேள்வி:- ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

பதில்:- பள்ளிகளுக்கான வாகன கட்டணத்துக்கு என்று எந்த சட்டமும் இதுவரை இல்லை. பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரும் பட்சத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

கேள்வி:- ஆட்டோக்களில் மீட்டர்களை பயன்படுத்தாமல் இயக்குகிறார்களே...?

பதில்:- தற்பொழுது ‘பேனிக்’ (பீதி) பட்டனுடன் கூடிய எலக்ட்ரானிக் மீட்டர்களை ஆட்டோக்களில் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் உள்ள ஆட்டோக்களில் பொருத்தப்படும். அதில் செலுத்தப்படும் கட்டணத்துக்கு உண்டான ரசீது பெற்றிடும் வசதியும் உள்ளது.

ஆட்டோக்களில் செல்லும்போது அதிக கட்டணம் வசூலித்தாலோ, பயணிகளுக்கு பயணத்தில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டாலோ எலக்ட்ரானிக் மீட்டர்களில் உள்ள ‘பேனிக்’ பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடிக்கும் வசதியும் உள்ளது. குறிப்பாக இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக அமையும்.

இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

Next Story