மாநில செய்திகள்

நடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர் + "||" + Actor-scriptwriter Crazy Mohan's death: paid tribute to film personalities

நடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்

நடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள்  அஞ்சலி செலுத்தினர்
நகைச்சுவை நடிகரும், கதை-வசனகர்த்தாவுமான கிரேசி மோகன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. மேரேஜ் மேட் இன் சலூன், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா உள்பட ஏராளமான மேடை நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்தவர், கிரேசி மோகன்.
சென்னை, 

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகத்தை எழுதியதால், மோகன் என்ற அவருடைய பெயருக்கு முன்னால், ‘கிரேசி’ என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டது. அதில் இருந்து ‘கிரேசி மோகன்’ என்று அழைக்கப்பட்டார்.

அவர், சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், பிற்பகல் 2 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவருடைய உடல் மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய இறுதிச்சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

மரணம் அடைந்த கிரேசி மோகனுக்கு வயது 67. அவருடைய மனைவி பெயர், நளினி. இவர்களுக்கு அஜய், அர்ஜுன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், திரைக்கதை வசன கர்த்தாவும், திரைப்பட நடிகருமான கிரேசி மோகன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான கிரேசி மோகனின் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக மற்றும் நாடகத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

கிரேசி மோகன் மறைவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திரையுல கதை, வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி பல மேடை நாடகங்களை இயக்கி நடித்த கிரேசி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிப்படையில் பொறியாளரான அவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை, வசன கர்த்தாவாக விளங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர். அவரின் மறைவு திரையுலகுக் கும், மேடை, நாடக உலகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் இரங்கல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. “கிரேசி” என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் “நகைச்சுவை ஞானி”.

அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னை காட்டிக்கொண்டார் என்பதுதான் உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர் .

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?

மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.

அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது.

இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

“கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.

அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.”

மேற்கண்டவாறு கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...