மாநில செய்திகள்

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி + "||" + Ask the Parole to argue in the case What is the problem with Nalini hearing before?

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மகள் ஹரித்ரா லண்டனில் பாட்டியுடன் வசித்து வருகிறார். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். இதற்காக எனக்கு 6 மாதம் பரோல் வழங்க சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை.

எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர், (2000-ம் ஆண்டு முதல்) 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அவர்கள் 10 ஆண்டுகளுக்கு குறைவாகவே சிறை தண்டனை அனுபவித்தவர்கள். ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. எனவே மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும். இது தொடர்பான வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல், “நளினி தன்னுடைய மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகி வாதிட அனுமதிக்க கூடாது. அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது” என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “வழக்கில் ஆஜராகி வாதிட நளினிக்கு சட்டப்படி முழு உரிமை உள்ளது. அந்த உரிமையை வழங்க மறுக்க முடியாது. தேவைப்பட்டால், வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யலாம். நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது? எனவே, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.