மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு இல்லை : விவசாயிகள் கவலை + "||" + The water from the Mettur dam today is not open: farmers are concerned

மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு இல்லை : விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு இல்லை : விவசாயிகள் கவலை
நீர்மட்டம் குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர், 

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் கைகொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு குறித்த நேரத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக எங்குபார்த்தாலும் காவிரி ஆறு பாறைகளாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாட்டில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கபினி அணை நிரம்பும் தருவாயை எட்டினால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 45.59 அடியாக (அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி) இருந்தது. அணைக்கு வினாடிக்கு 861 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் இன்று (புதன்கிழமை) தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு இன்று தண்ணீர் திறப்பு இல்லை என்பதால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.