ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி நிதி வேண்டும் : மத்திய அரசிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை


ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி நிதி வேண்டும் :  மத்திய அரசிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2019 11:27 PM GMT (Updated: 11 Jun 2019 11:27 PM GMT)

ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் ஊரக பகுதியில் உள்ள வீடுகளில் 99.98 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.தமிழகத்தின் மக்கள் தொகை 7.28 கோடியாகும். தமிழகத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளைச் சேர்த்து தினமும் 4,505 எம்.எல்.டி. (மில்லியன் லிட்டர்) நீர் தேவைப்படுகிறது. இங்கு 600 நீர் வினியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணைகள், ஆறுகள், நீரோட்டங்கள் போன்ற தரைக்கு மேலுள்ள ஆதாரங்களை நம்பியிருக்கும் திட்டங்களாகும்.

2016-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. மறு ஆண்டில் குறைவாக மழை பெய்தது. 2018-ம் ஆண்டில், சராசரி மழையளவில் 24 சதவீத மழைதான் கிடைத்தது. எனவே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், மக்களுக்கு நீர் பகிர்ந்தளிப்பதில் சவாலை சந்தித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக புதிய ஆழ்துளை கிணறுகளை தோண்டுதல், கிணறுகளை தூர்வாருதல், நீர் வினியோக திட்டங்களை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 550 மில்லியன் லிட்டர் குடிநீரை சேகரிக்கக்கூடிய கடல்நீரை குடிநீராக்கும் 2 திட்டங்கள் ரூ.7,337.78 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு டிசம்பரில் இந்த திட்டங்கள் நிறைவடையும்.

ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இதில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், மரக்காணம், விக்கிரவாண்டி பேரூராட்சிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்கள் பயனடையும்.

சிவகங்கை மாவட்டத்தின் 2,452 ஊரக பகுதிகள், 8 பேரூராட்சிகள் காவிரி நதியின் நீர் ஆதாரத்தை பெறுவதன் மூலம் 10.77 லட்சம் பேருக்கு பயன் கிடைக்கும். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். வறட்சியை மேற்கொள்ளும் பணிகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.448 கோடி நிதி தேவைப்படுகிறது.

தூய்மை திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் 50 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. வீடு வீடாகச் சென்று கழிவுகளைப் பெற்று அவற்றை தரம் பிரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக தூய்மைக் காவலர்கள் என்ற பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story