மாநில செய்திகள்

அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு: தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Case of land acquittal: should not be arrested the DMK MLA - High court order

அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு: தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு: தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மேயரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியத்தை கைது செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.பார்த்திபன். இவர், கிண்டி போலீஸ் நிலையத்தில் கடந்த மே 31-ந்தேதி ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். தி.மு.க. சார்பில் முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கிண்டி தொழிலாளர் காலனியில், மா.சுப்பிரமணியனின் மனைவி காஞ்சனா பெயரில் உள்ள வீடு, சிட்கோ நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக பொய் தகவல் கூறியுள்ளார். உண்மையில் இந்த நிலம் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு 1959-ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. எஸ்.கே.கண்ணன் கடந்த 2015-ம் ஆண்டு இறந்து விட்டார்.

மா.சுப்பிரமணியன் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சென்னை மேயராக பதவி வகித்தார். அப்போது, எஸ்.கே.கண்ணனின் வாரிசாக தன் மனைவி காஞ்சனா பெயரை சேர்த்துள்ளார். இதற்கிடையே எஸ்.கே.கண்ணன், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தன் மகள் காஞ்சனாவுக்கு மாற்றிக் கொடுக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அந்த சொத்து காஞ்சனா பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் ஆவணங்களை தயாரித்துள்ளார்.

ஆனால், மா.சுப்பிரமணியத்தின் மனைவி காஞ்சனாவின் பாஸ்போர்ட்டில், தந்தை பெயர் சாரங்கபாணி என்றும், மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த வேட்புமனுவில், காஞ்சனாவின் தந்தை பெயர் சக்கரபாணி என்றும் உள்ளது. எந்த ஒரு இடத்திலும், எஸ்.கே.கண்ணன் தான் காஞ்சனாவின் தந்தை என்று இல்லை.

மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் போலியான ஆவணங்களை கொண்டு, அரசு சொத்தை அபகரித்துள்ளனர். எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மா.சுப்பிரமணியனும், காஞ்சனாவும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கடும் ஆட்சேபனை தெரிவித்து வாதம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று புகார்தாரர் பார்த்திபன் தரப்பில் முறையிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) தள்ளிவைக்கிறேன். அதுவரை மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோரை போலீசார் கைது செய்யக்கூடாது. இந்த முன்ஜாமீன் மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல, புகார்தாரர் பார்த்திபனுக்கு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.