மாநில செய்திகள்

ராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு + "||" + Cinema director PA Ranjith asked anticipatory bail,appeals to the Madurai court

ராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு

ராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு
சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
மதுரை,

கடந்த 5-ந்தேதி நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர்பரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினேன். அப்போது சோழ மன்னன் ராஜராஜசோழன் தொடர்பான வரலாற்று உண்மைகள் சிலவற்றை எடுத்து கூறினேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது, சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

சோழ மன்னன் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என நமது வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் அவருடைய ஆட்சியை ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என சமுதாய சீர்திருத்தவாதிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

பல வரலாற்று புத்தகங்களில் கூறியுள்ள தகவல்களைத்தான் நான் தெரிவித்தேன். என்னுடைய பேச்சு மட்டும் சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.

மேலும் எனது கருத்து எந்த சமுதாயத்துக்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் பேசினேன். என்னுடைய பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆனால், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் என் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.