மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் வழக்கு: வைகோவின் எதிர்மனு விசாரணைக்கு ஏற்பு - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Vedanta Company case to open Sterlite plant : Accept the vaiko's negative investigation -High Court orders

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் வழக்கு: வைகோவின் எதிர்மனு விசாரணைக்கு ஏற்பு - ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் வழக்கு: வைகோவின் எதிர்மனு விசாரணைக்கு ஏற்பு - ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கை எதிர்க்கும் வைகோவின் மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.
சென்னை, 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்களையும் மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஹரி ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது வைகோ கோர்ட்டில் ஆஜராகி வாதம் செய்தார். அவரது வாதம் பின்வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலை தொடங்க தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டிய நாள் முதல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறேன். மக்களை திரட்டி, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். இந்த ஆலையை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று 1997-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டு வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்து, தடை உத்தரவு பெற்று, ஆலையை தொடர்ந்து இயக்கியது. இதற்கிடையில், 2013-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி காலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறி, தூத்துக்குடி நகருக்குள் பரவியது. பலர் மயக்கமுற்றுக் கீழே விழுந்தனர். தூத்துக்குடி நகரமே பதற்றமானது.

இதன் பின்னர் மக்களின் போராட்டம் தீவிரமானது. கடந்த மே 22-ந் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனைத் தொடர்ந்து, ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அனைத்து வழக்குகளிலும் நானும் ஒரு மனுதாரராக இருந்து வாதிட்டுள்ளேன். எனவே, இந்த வழக்கில், என்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதேபோல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பிலும், ஆதரவாக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பிலும் வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி, “இந்த வழக்கில் பலரை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்தால் வழக்கு விசாரணை காலதாமதமாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் யாருடைய மனுக்களையும் ஏற்கவேண்டாம். இதனால், விசாரணையை நீர்த்துப் போகச் செய்துவிடும். எனவே எல்லா மனுக்களையும் நிராகரிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்திருந்த வைகோ, பேராசிரியை பாத்திமா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம். ஏன் என்றால், இவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏதாவது ஒரு வழக்கில் ஒரு வாதியாக இருந்துள்ளனர். அதேநேரம், ஆலைக்கு ஆதரவாக வழக்கை தாக்கல் செய்தவர்கள், இப்போதுதான் முதல் முறையாக இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதனால், அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது - மதுரையில் வைகோ பேட்டி
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை அர்த்தமற்றது என மதுரையில் வைகோ கூறினார்.
2. திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை
திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
3. பணம் கொடுக்காமல் செல்பி எடுக்க வந்தவரை திருப்பி அனுப்பிய வைகோ
பணம் கொடுக்காமல் செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பினார்.
4. நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலைவனமாகும் - குந்தாரப்பள்ளியில் வைகோ பேட்டி
நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலை வனமாகும் என குந்தாரப்பள்ளியில் வைகோ கூறினார்.
5. தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.