தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி ‘திடீர்’ சந்திப்பு : புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நியமனம் பற்றி ஆலோசனை


தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி ‘திடீர்’ சந்திப்பு : புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நியமனம் பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 13 Jun 2019 12:14 AM GMT (Updated: 13 Jun 2019 12:14 AM GMT)

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சென்னை, 

தமிழக அரசின் இரண்டு பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகளான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகின்றனர். அந்தப் பதவிகளுக்கு அடுத்ததாக நியமிக்கப்படுகிறவர்கள் யார் என்பது பற்றி அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சூழ்நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷா மற்றும் சில முக்கிய மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்கள்.

அ.தி.மு.க.வின் தலைமை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டம் நிறைவடைந்த சில மணி நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது புதிய தலைமைச் செயலாளர், புதிய டி.ஜி.பி. ஆகியோர் நியமனம், சட்டசபை கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story