7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கவர்னர், முதல்-அமைச்சருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்


7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கவர்னர், முதல்-அமைச்சருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 13 Jun 2019 6:39 PM GMT (Updated: 13 Jun 2019 6:39 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991-ம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பிறகும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை, அது குறித்து முடிவெடுக்க தமிழக கவர்னராகிய தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன.

விடுதலை செய்ய வேண்டும்

பேரறிவாளன் போன்றவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, திரிக்கப்பட்ட வாக்கு மூலத்தால் தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், 7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்துவிட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Next Story