நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 9:30 PM GMT (Updated: 13 Jun 2019 7:32 PM GMT)

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கேட்ட வழக்கின் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில், அச்சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் பதவிக்கான தேர்வு நடத்த வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்து விட்டது.

ஆனால், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல், அந்த நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்தனர். இந்த நிர்வாகிகள் ஏதோ சர்வாதிகாரிகள் போல செயல்படுகின்றனர். எதிர்த்து கேள்வி கேட்கும் உறுப்பினர்களை சங்கத்தில் இருந்து நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் நீக்கம் செய்தனர்.

தேர்தலுக்கு தடை

தற்போது முறையான உறுப்பினர்கள் பட்டியலை தயாரிக்காமல், தேர்தலை நடத்த உள்ளனர். எனவே, இந்த தேர்தலுக்கு தடை விதிக்கவேண்டும். வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்க தற்காலிக குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறுத்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர், சங்கத்தில், மரணமடைந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story