ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பலியான பரிதாபம்


ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:59 PM GMT)

மோட்டார் சைக்கிளில் புறப்பட முயன்றபோது ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு, 

மோட்டார் சைக்கிளில் புறப்பட முயன்றபோது ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

புகையிலை வியாபாரி

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கனக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). புகையிலை வியாபாரி.

இவர் நேற்று வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் தாசம்பாளையம் சென்றார். அங்கு கடையில் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

லாரி கவிழ்ந்தது

அப்போது கோவையில் இருந்து பவானிசாகர் நோக்கி கழிவு அட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. தாசம்பாளையத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி ரோட்டில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மீது கவிழ்ந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி பழனிசாமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

சாவு

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு பழனிசாமி மீட்கப்பட்டார். உடனே அவர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story