மாநில செய்திகள்

மன்னர் ராஜராஜசோழனை விமர்சித்தது ஏன்? பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் + "||" + Madurai Court judge condemned

மன்னர் ராஜராஜசோழனை விமர்சித்தது ஏன்? பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்

மன்னர் ராஜராஜசோழனை விமர்சித்தது ஏன்? பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்
மக்கள் போற்றும் ராஜராஜசோழனை விமர்சிக்கலாமா? என்று பா.ரஞ்சித்துக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை, 

சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 5-ந்தேதி நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர் பரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றேன். அந்த கூட்டத்தில் சோழ மன்னன் ராஜராஜசோழன் குறித்து சிலவற்றை பேசினேன்.

பல வரலாற்று புத்தகங்களில் கூறியுள்ள தகவல்களைத்தான் நான் தெரிவித்தேன். என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் பேசினேன். என்னுடைய பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பாகுபாடு காட்டவில்லை

இந்த வழக்கு நீதிபதி ராஜ மாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று மதுரை அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

முத்துக்குமார் தரப்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமதுரஸ்வி ஆகியோர் ஆஜராகி, ’ராஜராஜசோழன் ஆட்சியின்போது மக்கள் எந்த பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதற்கு பல புத்தகங்கள் உதாரணமாக இருக்கின்றன. டெல்டா பகுதியில் தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களாக மாற்றினார். கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆட்சியை கோலோச்சினார். மிகச்சிறந்த ஆட்சியை வழங்கியவர் அவர். மனுதாரர் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பேசியுள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது‘ என்று வாதாடினார்கள்.

அதற்கு, பா.ரஞ்சித் தரப்பு வக்கீல் தாளைமுத்தரசு ஆஜராகி, ’பல்வேறு புத்தகங்களில் கூறப்பட்டு இருந்தவற்றையும், தான் அறிந்த வரலாற்று விஷயங்களையும்தான் மனுதாரர் பேசியுள்ளார். ஆனால் அவரது பேச்சு தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்‘ என்று வாதாடினர்.

நீதிபதி கேள்வி

பின்னர் நீதிபதி தெரிவிக்கையில், ’ராஜராஜ சோழன் மக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டதாக மனுதாரர் கூறியுள்ளார். தற்போதும் கூட தேவைப்படும ்பட்சத்தில் பொதுமக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி, அதற்கு உரிய இழப்பீட்டை வழங்குகிறது. தேவதாசி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதுகுறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்பட்சத்தில் மக்கள் கொண்டாடும் மன்னரை மனுதாரர் இவ்வாறு பேசியது ஏன்?‘ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யக்கூடாது

அப்போது குறுக்கிட்ட மனுதாரரின் வக்கீல், இந்த வழக்கில் மனுதாரரை போலீசார் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ’மனுதாரரை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்’ என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘இந்த வழக்கு குறித்து போலீசார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை