கோர்ட்டில் வழக்கு தொடரக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் 115 வி.ஏ.ஓ.வினர் இடமாற்றம் : தமிழக அரசு ஆணை


கோர்ட்டில் வழக்கு தொடரக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் 115 வி.ஏ.ஓ.வினர் இடமாற்றம் :  தமிழக அரசு ஆணை
x
தினத்தந்தி 14 Jun 2019 11:51 PM GMT (Updated: 14 Jun 2019 11:51 PM GMT)

கோர்ட்டில் வழக்கு தொடரக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் 115 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆணை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) தங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் பல காரணங்களுக்காக வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து அறிக்கைகள் வந்துள்ளன. மேலும், இடமாறுதல் கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் நிலுவையில் இல்லை என்றும் கலெக்டர்களால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இடமாறுதலினால் ஏற்படும் பயணப்படி இழப்பு, பணிமுதுநிலை இழப்பு ஆகியவற்றுக்கு சம்மதித்து உறுதிமொழி அளித்துள்ளனர். இந்த இழப்புகள் தொடர்பாக மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யமாட்டேன் என்றும் பணி இழப்பு ஏற்பட்டாலும் அதையும் ஏற்பேன் என்றும் உறுதிமொழி அளித்துள்ளனர். அதோடு, மாற்றப்படும் மாவட்டத்தின் எந்த இடத்திலும் பணியாற்ற சம்மதித்துள்ளனர்.

எனவே விண்ணப்பித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிபந்தனைகளுடன் ஒருவழி மாவட்ட மாறுதல் செய்து ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது. நிபந்தனைகளின்படி, இடமாறுதல் தொடர்பாக மாறுதல் பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. மாறுதல் செய்யப்படும் மாவட்டத்தில் எந்த இடத்தில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் அதை ஏற்க சம்மதிக்க வேண்டும்.

மாறுதல் செய்யப்படும் மாவட்டத்தில் பணியேற்கும் நாளில் தகுதிப் பட்டியலை வைத்து முதுநிலை நிர்ணயம் செய்யப்படும். இடமாற்றம் செய்யப்படும் மாவட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும் முதுநிலையைத்தான் ஏற்க வேண்டும். இதுதொடர்பாக எந்தவித மேல்முறையீடோ, கோர்ட்டில் முறையீடோ தாக்கல் செய்யக் கூடாது.

மாறுதல் செய்யப்பட்டு பணியை ஏற்றவுடன், வேறு மாவட்டத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் மாறுதல் கோரக் கூடாது. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மாறுதலில் சென்றுள்ள மாவட்டத்தில் பணியிடங்கள் கலைப்பு என்பது போன்ற சூழ்நிலை எழுந்து, பணியிழப்பு ஏற்பட்டால் அதை ஏற்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை சம்பந்தப்பட்டவர்களின் பணிப்பதிவேட்டில் பதிய வேண்டும். அதன் பின்னரே அவர்களை பணியில் இருந்து கலெக்டர்கள் விடுவிக்க வேண்டும்.

அவர்களை விடுவிப்பதற்கு முன்பு, அவர்கள் மீது குற்றச்சாட்டோ, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையினரின் விசாரணையோ, தற்காலிக பணி நீக்கமோ அல்லது வேறு தடைகளோ இல்லை என்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுடன் 115 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்ய அனுமதித்து சத்யகோபால் ஆணை பிறப்பித்துள்ளார்.

Next Story